Tuesday, May 12, 2009

இந்திய ஆட்சியாளர்களின் சாதனைகளும், பொது மக்களின் வேதனைகளும்!

எங்கள் ஆட்சியின் சாதனைகளை சொல்லி வோட்டுகளை வாங்குவோம் என்று ஆளுங்கட்சியனர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சியினரோ ஆட்சியாளர்கள் செய்த ஊழல்களையோ, செய்யத் தவறிய கடமைகளைச் சுட்டியோ எதிர் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இந்த வேடிக்கை விளையாட்டுகள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் நிறைவேறுகின்றன.


தொலைக்காட்சிகளில் பார்த்த சில விளம்பரங்கள் அருவருப்பையும், வெறுப்பையுமே ஏற்படுத்துகின்றன. "பாலங்கள் கட்டினோம்", "நீண்ட தேசிய நெடுஞ்சாலைகள் அமைத்தோம்", "வெள்ள நிவாரணப் பணிகள் மனித நேயத்துடன் செய்தோம்"...


இவையெல்லாம் சாதனைகளா என்ன? நீங்கள் பெருமையடித்துக் கொள்ளும் தேசிய நெடுஞ்சாலைகள் 1930-இல் பிராங்க்ளின் ரூசுவேல்ட் அமெரிக்க பொருளாதாரம் மோசமான நிலையில், அதிக மக்களுக்கு வேலைகள் தருமே, அதே சமயம் உட்கட்டமைப்பும் முன்னேறுமே என்று யோசித்து செய்த காரியம். அந்த வகையில் பார்த்தால் நம் நாட்டை இன்னும் நூறு ஆண்டுகள் பின் தங்கிய நிலையில் வைத்திருக்கிறார்கள், சாதனையாளர்களான நமது அரசியல்வாதிகள்.

முன்னேறிய நாடான அமெரிக்காவுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு என்பார்கள். சரி, நம் நாட்டைப் போன்ற வளரும் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் இவற்றை எடுத்துக் கொள்வோம். அங்கே கட்டிய பாலங்கள், நெடுஞ்சாலைகள் இவற்றின் தரம், கட்டமைப்பு இவற்றுடன் நம் நாட்டின் ஏதாவது ஒரு பாலத்தை ஒப்பிட முடியுமா? இத்தனைக்கும் அங்கிருக்கும் அரசியல்வாதிகள் அவைகளை சாதனைகளாக போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்வதில்லை.


மனித நேயத்துடன் வெள்ள நிவாரணப் பணிகள் செய்ததாக கூறுவது தான் இருப்பதிலே உச்சக்கட்ட அருவருப்பு. இந்திய நகரங்களில் வடிகால் வசதிகளை சரிவர செய்திருந்தால், கனமழை பெய்யும் போது வெள்ளம் வரும் வாய்ப்பே இருந்திருக்காதே? சிங்கப்பூர் சென்று பாருங்கள், இரண்டு மணி நேரம் மழை பெய்தாலும், மழை ஓய்ந்த பிறகு சாலையோரங்களில் தேங்கி நிற்கும் நீரை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது.


நம் நாட்டு அரசியல்வாதிகள் சாதனைகளாக விளம்பரம் செய்து கொள்ளும் விஷயங்கள் அனைத்தும், நம் வரிப்பணத்தில் அவர்கள் நமக்கு செய்ய வேண்டிய கடமைகள் மக்களே!



சில ஆயிரம் ரூபாய் சொத்துடன் வந்தவர்கள், கொடிகளை சுவிற்சர்லாந்து நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்தது மட்டுமே அவர்களின் சாதனைகள்.


24x7 மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர முடியாத அரசியல்வியாதிகளால், மக்கள் பட்ட வேதனைகள் தான் அதிகம்.



இன்னும் பல பக்கங்கள் எழுதிக் கொண்டே போனாலும், இந்த பட்டியல் முடியாது.


"நம் நாட்டுக்கு நல்ல அரசியல்வாதிகள் வருமாறு இறைவனை வேண்டிக் கொள்வோம்" என்று ஞாயிறு பூசையில் பிரார்த்தித்த பாதிரியாரை பார்த்து நமுட்டு சிரிப்புடன் "இப்படியே பல வருஷம் வேண்டிக்கிட்டு தானே இருக்கோம்" என்று முணுமுணுக்க மட்டும் தானே முடியும் சராசரி குடிமகனால்.

allvoices

No comments:

Post a Comment

Who is next Super Star ?